X

ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்று தான் – அமைச்சர் துரைமுருகன்

வேலூர் புதிய பஸ் நிலையத்தை கடந்த 30-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சில பணிகள் நிறைவடையாததால் பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் இன்று வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது. இதனை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வருவதில் நிறைய இடையூறு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கண்டலேறுவிலிருந்து கால்வாய் வழியாக தண்ணீர் செல்லும் போது தண்ணீரை அங்குள்ளவர்கள் எடுத்து கொள்கின்றனர்.

அ.தி.மு.க அலுவலகம் சீல் வைப்புக்கும் தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றுதான். எங்களுக்கு இருவரின் தயவும் தேவையில்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விவகாரத்தில் அரசின் விதிமுறைப்படி விழா அழைப்பிதழில் பெயரை போட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை பின்பற்றப்படவில்லை.

கவர்னர் சனாதன தர்மம் பற்றி பேசுகிறார் என்றால் அவர் சனாதனவாதி.தமிழ்நாட்டில் கொரோனா கட்டுபாட்டில் இருந்தது. ஆனால் இப்போது கட்டுபாட்டை மீறி வருகிறது. ஆனாலும் பழைய வேகமில்லை. கொரோனாவால் பாதிக்கபடுபவர்கள் 2 நாட்களில் சரியாகி விடுகின்றனர்.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் சரியில்லை என குற்றம் சாட்டுபவர்களில் நானும் ஒருவன். அதற்கு மாநகராட்சி கமிஷனரும், கலெக்டரும் தான் பதில் சொல்ல வேண்டும்.மேல் அரசம்பட்டு அணை விரைவில் கட்டப்படும். பாலாற்றின் குறுக்கே திருப்பாற்கடல், அரும்பருத்தி, சேண்பாக்கம், பொய்கை, மற்றும் அகரம் ஆறு, கவசம்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.