கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த போப் போட்டி – கார்டினல் பியட்ரோ பரோலின் முன்னிலை

கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் (வயது 88) உடல் நலக்குறைவால் கடந்த 21-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் 26-ந் தேதி ரோமில் அடக்கம் செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இதற்கு விடை காணும் முயற்சியில் வாடிகன் இறங்கி இருக்கிறது.

அதன்படி கார்டினல் எனப்படும் கர்தினால்கள் கூட்டம் இது குறித்து ஆலோசனை நடத்தினர். அதன்படி புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் கான்கிளேவை (மாநாடு) அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

உலகம் முழுவதும் 252 கார்டினல்கள் உள்ள நிலையில், போப்பை தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் ஆவர். அவர்கள் தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆக தேர்வு செய்வார்கள்.

இந்த சூழலில் அடுத்த போப் ஆண்டவருக்கான போட்டியில், ஹங்கேரியை சேர்ந்த கார்டினல் பீட்டர் எர்டோ (72), பிலிப்பைன்ஸை சேர்ந்த கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டாக்லே (67), ஆப்பிரிக்காவின் கானாவை சேர்ந்த கார்டினல் பீட்டர் டர்க்சன்(76), இத்தாலியைச் சேர்ந்த கார்டினல் பியட்ரோ பரோலின்(70) ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களில் கார்டினல் பியட்ரோ பரோலின் அடுத்த போப் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. பியட்ரோ பரோலினுக்கு 41 சதவீத ஆதரவு இருப்பதாகவும், அடுத்ததாக லூயிஸ் அன்டோனியோ டாக்லே-க்கு 29 சதவீத ஆதாரவும் இருப்பதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools