‘களவாணி 2’ படத்திற்கு தடை – விநியோகஸ்தர் விளக்கம்

விமல், ஓவியா நடிப்பில் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. தற்போது அதே கூட்டணியில் ‘களவாணி 2’ படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இந்த நிலையில் விநியோகஸ்தரும். தயாரிப்பாளருமான சிங்காரவேலன் இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் மூலம் ஆறு வார இடைக்காலத் தடை பெற்றுள்ளார்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் சற்குணம் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த படத்தை தான் தயாரித்துள்ளதாகவும், விமலுக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் இடையே உள்ள பணப் பிரச்சினை தொடர்பாக, ‘களவாணி 2’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சிங்கார வேலன் இடைக்கால தடை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

‘விமல் சொந்தமாகத் தயாரித்து நடித்த ‘மன்னர் வகையறா’ என்கிற படத்திற்கு என்னிடம் மூன்று கோடி ரூபாய் பைனான்ஸ் பெற்றிருந்தார். மூன்று கோடியில் அவரால் படத்தை முடிக்க முடியவில்லை.

இன்னும் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால்தான் படத்தை முடித்து வெளியிட முடியும் என்றும், இல்லை என்றால் இந்தப் படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுவேன் என்கிற ரீதியில் ஒரு மறைமுகமான மிரட்டல் விடுத்தார். நான் மேற்கொண்டு பணம் கொடுக்கவில்லை.

சில நாட்கள் கழித்து என்னை அழைத்து பேசிய விமல், ‘களவாணி 2’ படத்தைத் தயாரிக்க ஒரு குறிப்பிட்ட தொகையை பைனான்ஸ் செய்து உதவுமாறும் அந்தத் தொகையை வைத்து ஏற்கனவே நின்று கொண்டிருக்கும் மன்னர் வகையறா படத்தை முடித்து வெளியிட்டு விடுவோம் என்றும் ‘களவாணி 2’ படத்தையும் தொடங்கி விடுவோம் என்றும் மன்னர் வகையறா படத்துக்காக நீங்கள் கொடுத்த பணம் உங்களைத் தேடி வந்துவிடும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நானும் அதற்கு ஒப்புக் கொண்டு மேலும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து என்னிடம் வாங்கிய பணத்தின் மதிப்பிற்கு களவாணி 2 படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என விமலிடம் கூறி அதை அக்டோபர் 17-ந் தேதி ஒப்பந்தமாகவும் பதிவு செய்து கொண்டேன்.

இன்றைய தேதி வரையில் விமல் எனக்கு 4.32 கோடி ரூபாய் தர வேண்டி இருக்கிறது. இந்தநிலையில் தான் ‘களவாணி 2’ படம் வர்மன்ஸ் புரொடக்‌‌ஷன்ஸ் சார்பில் தயாராகி வருவதாக அறிவிப்பு வெளியானது.

நான் இயக்குநர் சற்குணத்திடமும். விமலிடமும் ஏற்கனவே காப்பிரைட் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்கள் என்றும் அதை மீறி இவ்வாறு விளம்பரப்படுத்துவது முறை அல்ல என்றும் பல முறை கூறியும் அவர்களிடம் இருந்து பதில் இல்லாததால் நீதிமன்றத்தை அணுகினேன். அங்கேயும் அவர்கள் ஆஜராகவில்லை. எங்கள் தரப்பு வாதங்களையும். ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிமன்றம் ‘களவாணி 2’ படத்துக்கான காப்பிரைட் உரிமை எங்களுக்குத்தான் என்று கூறி தீர்ப்பு வழங்கியதுடன், களவாணி 2 படத்தை வேறு யாரும் வெளியிடக் கூடாது என ஆறு வார கால இடைக்கால தடையும் விதித்துள்ளது.

நீதிமன்றம் நல்ல தீர்ப்பைத் தரும் என இயக்குநர் சற்குணம் கூறியிருக்கிறார். உண்மையிலேயே நீதிமன்றம் எங்களுக்கு நல்ல தீர்ப்பைத்தான் கொடுத்துள்ளது. இதன் மீதான விசாரணை வரும் ஜூன் 10-ந் தேதி நடைபெற இருக்கிறது’.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools