காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம் – சம்பவம் நடந்த தோட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளும் சிபிசிஐடி போலீஸ்

காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மர்ம மரண வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

20 நாட்களுக்கு மேலாகியும் இந்த வழக்கில் மர்ம முடிச்சுகள் அவிழவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும் விதமாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு நேற்று மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தையும் மாவட்ட போலீசார், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நேற்றே ஒப்படைத்தனர். உடனடியாக வழக்குப்பதிவு செய்த நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையையும் தொடங்கினர்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகா செல்வி, முனியாண்டி, சூர்யன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று திசையன் விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூருக்கு சென்று விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில் இன்று மீண்டும் கரைசுத்து புதூருக்கு சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் 2-வது நாளாக சம்பவம் நடந்த தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.
அங்கு ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா? என்று ஆய்வு செய்த நிலையில், சம்பவம் நடந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஜெயக்குமாரின் மனைவி மற்றும் மகன்களிட மும் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் ஜெயக்குமாரின் வீட்டில் பொருத்தியிருக்கும் கேமராக்கள், அவை எந்த திசையை பார்த்து இருக்கின்றன, வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தோட்டதிற்கான வியூ பாய்ண்ட் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இதனிடையே ஜெயக்குமார் எழுதியதாக கிடைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதியம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து நெல்லைக்கு வருகிறார். இதனால் அவரும் கரைசுத்துபுதூருக்கு சென்று விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools