கார் பற்றி பேசிக்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலத்தில் தொடங்கி அமெரிக்க-சீன உறவு பல சிக்கல்களையும், சச்சரவுகளையும் எதிர்நோக்கி வருகிறது.

2021ல் ஜோ பைடன் பதவியேற்றதும் இந்த நிலை மாறும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்திருந்தாலும் ரஷிய-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் நிலைமை மேலும் சிக்கலானது. இதில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இரு நாட்டு வர்த்தக உறவு மேலும் அதிக பாதிப்புக்குள்ளானது.

இதன் காரணமாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சென்ற வாரம் அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டார். நவம்பர் 14 அன்று தொடங்கி 17 வரை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இரு நாடுகளுக்குமிடையே உயர்மட்ட பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன.

தான் செல்லும் நாடுகளுக்கெல்லாம், சீன அதிபர், அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹாங் கி (Hongqi) எனும் நவீன காரில் பயணிக்கிறார். அவர் அயல்நாடுகளுக்கு சுற்று பயணம் செல்லும் போது அவருக்காக அங்கெல்லாம் அந்த கார் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் இரு நாட்டு அதிபர்களுக்கும் நடந்த பல சந்திப்புகளில் ஒரு சந்திப்பு முடிந்து இருவரும் வெளியே வரும் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெளியே நின்றிருந்த சீன அதிபரின் காரை கண்டு வியந்தார். “இது மிக அழகான கார்” என ஜோ பைடன் பாராட்டினார். அதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங், “ஆம், இதன் பெயர் ஹாங் கி” என பதிலளித்தார்.

மீண்டும் ஜோ பைடன், “இது எங்கள் நாட்டின் கேடிலாக் (Cadilac) காரை போன்று உள்ளது. சர்வதேச பயணங்களில் என்னுடன் அதுவும் பயணிக்கும். கேடிலாக் காரை இங்கு என்னவென்று அழைப்பார்கள் தெரியுமா? மிருகம் (beast) என்று” என கருத்து தெரிவித்தார். இதனையடுத்து இருவரும் கைகுலுக்கி கொண்டனர். பின் சீன அதிபர் விடை பெற்றார்.

இரு நாட்டு அதிபர்களும் தங்கள் கார்களை குறித்து சில நொடிகள் தங்கள் மொழியில் பேசுவதும், அவற்றை இருதரப்பு மொழிபெயர்ப்பாளர்கள் விளக்கும் காட்சிகளும் ஒரு வீடியோவில் பதிவாகி, அது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கடினமான சிக்கல்களை தீர்க்க இரு நாட்டு அதிபர்களும் முயன்று வரும் போது, இது போன்ற மென்மையான தருணங்கள் இணைய தளத்தில் வரவேற்பை பெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் பயணிக்கும் கேடிலாக், 8 ஆயிரம் கிலோ எடையுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியே பகிரப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் சீன அதிபர் பயணிக்கும் ஹாங் கி, 6-லிட்டர் வி12 (V12) எஞ்சின் உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களும், வசதிகளும் நிறைந்திருந்தாலும், இவை குறித்த தகவல்களும் வெளியே பகிரப்படுவதில்லை.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news