X

காஷ்மீர் தலைவர்களை சிறை வைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தபின்னர், காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் தலைவா்கள், பிரிவினைவாத தலைவா்கள் பலா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது முன்னாள் முதல் மந்திரிகள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் மீதும் பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்து உள்ளது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனமும் கவலையும் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை மத்திய அரசு கைவிடவேண்டும். பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை உடனே விடுவிக்க வேண்டும்.

காஷ்மீரில் அனைத்து தரப்பு மக்களும் எந்த தடையும் இன்றி ஜனநாயக காற்றை சுவாசிக்க இடமளிக்க வேண்டும். மேலும் ஜம்மு காஷ்மீரில் அடைக்கப்பட்டிருக்கும் ஜனநாயகத்தின் கதவுகளை பிரதமர் மோடி திறக்கவேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags: south news