X

கிரண் பேடிக்கு விளம்பர வியாதி – முதல்வர் நாராயணசாமி தாக்கு

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தமிழக அரசியல் தலைவர்கள் ஊழல் பேர்வழிகள் என்றும், இதில் மக்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.

தமிழகத்தில் மட்டும் இல்லை கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா என பல மாநிலங்களில் மழையின்மையால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறை சில மாநிலங்களில் திறம்பட கையாளப்பட்டு உள்ளது. சில மாநிலங்களில் தாமதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு இந்த பணிக்கு உதவ வேண்டும்.

அரசியல் தலைவர்கள், மக்களை அவமானப்படுத்தும் செயலில் கிரண்பேடி ஈடுபட்டுள்ளார். மற்ற மாநிலங்களின் வி‌ஷயத்தில் தலையிட அவருக்கு அருகதை கிடையாது, தேவையும் இல்லை. தேவையில்லாமல் மற்ற மாநில விவகாரங்களில் தலையிட்டு, அவரே அவப்பெயரை பெற்று கொண்டுள்ளார்.

எந்தவித ஆதாரமும் இல்லாமல் அரசியல் தலைவர்கள், மக்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

அவருக்கு வியாதி இருக்கிறது. எப்போதும் விளம்பரத்தில் இருக்கவே அவர் விரும்புவார். மற்றவர்கள் சொல்வதை அவர் கவனிப்பது இல்லை.

புதுச்சேரியிலும் இதுபோன்ற சம்பவத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுப்பதற்காக மோடி, கிரண்பேடியை நியமித்துள்ளதாக தெரிகிறது. கவர்னராக இருந்துகொண்டு தரம் தாழ்ந்த வேலையை அவர் செய்து வருகிறார்.

மக்கள் எப்போது பொங்கி எழ வேண்டுமோ அப்போது பொங்கி எழுவார்கள். மக்கள் பொங்கி எழுந்ததை தான் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பார்த்தோமே.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: south news