குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்குவதாக வெளியான தகவல் தவறானது – அமைச்சர் செல்லூர் ராஜூ

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கூட்டுறவுத் துறை செயல்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன், கலெக்டர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், வி.பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பெருமாள் நகர் கே.ராஜன், கூட்டுறவுத் துறையின் சிறப்புப்பணி அலுவலர் ராஜேந்திரன், கூடுதல் பதிவாளர்கள் அந்தோணிசாமி ஜான்பீட்டர், ரவிக்குமார், திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ராஜ்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் காமாட்சி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் தேவராஜன், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கிசான் கிரடிட் கார்டு, வேளாண் பயிர்க் கடன், சிறு, குறு விவசாய கடன், முதலீட்டுக் கடன், நகைக் கடன். கைத்தறிக் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சிறு வணிகக் கடன், டாம்கோ, டாம்செட்கோ, மகளிர் சுயஉதவிக் குழு கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொது வினியோகத் திட்டம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு வங்கி, அம்மா மருந்தகம், கூட்டுறவு மருந்தகம், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், அம்மா நகரும் ரேஷன் கடைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் குறித்து துறை ரீதியான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டமான அம்மா நகரும் நியாய விலைக் கடையை செயல்படுத்தி, ஒரு சாமானிய முதல்-அமைச்சராக திகழந்து வருகிறார். தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

கலசபாக்கம் பகுதியில் மலைக்கிராமங்கள் அதிகமாக உள்ளதால் அங்கு மட்டும் 85 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு அருகாமையில் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது முதல்- அமைச்சரின் மாபெரும் சாதனை. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது. எந்த அறிவிப்பாக இருந்தாலும் தமிழக முதல்-அமைச்சர்தான் அறிவிப்பார். மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டு பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்திற்கு 316 டன் வெங்காயம் பிற மாநிலங்களில் இருந்து வரப்பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று 11 டன் வெங்காயம் வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் துணை பதிவாளர்கள் சரவணன், ஆரோக்கியராஜ், பிரேம், கமலக்கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare