கேட்ச் பிடிக்க முயன்ற பவுலரை தடுத்த பேட்ஸ்மேன் – வைரலாகும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வீடியோ

இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தில் நேற்று  முன்தினம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியை சேர்ந்த அலெக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த போட்டியில் நடந்த ஒரு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 17-வது ஓவரை மார்க் வுட் வீசினார். அந்த ஓவரில் அவர் வீசிய 3-வது பந்தை மேத்யூ வேட் தூக்கி அடிக்க முயன்ற போது பேட்டில் டாப் எட்ஜாகி பவுலருக்கே கேட்ச்சாக சென்றது.

ஒரு புறம் மார்க் வுட் தன்னிடம் வந்த கேட்ச்-ஐ பிடிப்பதற்காக முற்பட்டார். மற்றொருபுறம் மேத்யூ வேட் பாதி களத்திற்கு ரன் ஓட முயன்றுவிட்டு ரன் அவுட் ஆகிவிடுவோமோ என்ற அச்சத்தில் மீண்டும் தன் இடத்திற்கு திரும்பினார். அப்போது மார்க் வுட்டை கேட்ச் பிடிக்கவே விடாமல் இழுத்துப்பிடித்து தடுத்தார். இதனால் அந்த கேட்ச் மிஸ்ஸானது.

இங்கிலாந்து வீரர்கள் இதற்கு அவுட் கேட்டனர். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. பவுலர் கேட்ச் பிடிக்க சென்ற போது எப்படி ஒருவர் தடுத்து நிறுத்து முடியும். இது கிரிக்கெட் விதிகளுக்கு புறம்பானது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேத்யூ வேட் கேட்சை பிடிக்க விடாமல் தடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools