கேரளாவில் கன மழை – களம் இறங்கிய ராணுவம், விமானப் படை

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையால் மாநிலம் முழுவதும், குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய கேரள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
அங்கு தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக மாநிலத்தின் நெற்கிண்ணமாக அழைக்கப்படும் குட்டநாடு பிராந்தியம் வெள்ளத்தில் மிதக்கிறது. கொல்லம், கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

எர்ணாகுளம் மாவட்டத்தில் கோதமங்கலம் இடமலையாறு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இடமலையாறு அணையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலையின் ஒரு பகுதி இடிந்து சரிந்து விழுந்தது. இதனால் ஆதிவாசி காலனிகளுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.இதையொட்டி தேசிய இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் முகாமிட்டுள்ளனர். கோட்டயம் மாவட்டம், முண்டகாயம் அருகே குட்டிக்கல் பகுதியில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த சில வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.

இந்த நிலச்சரிவில் சிக்கி அந்த பகுதியை சேர்ந்த தாய்-மகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கிய 9 பேர் மாயமானார்கள். அவர்களை தேடும் பணிக்கு கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் கேரளா விரைந்தது.

இடுக்கி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் தொடுபுழா அருகே அரக்குளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றுப்பாலத்தில் சென்ற கார் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதில் காரில் இருந்த பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.இதில் பெண்ணின் உடல் கணியாம் தோடு பகுதியில் மீட்கப்பட்டது. அந்த பெண்ணுடன் சென்ற நபரை போலீசாரும், தீயணைப்பு படையினரும் தேடி வருகின்றனர்.

பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம்புகுந்ததால் மக்கள் வீடுகளின் மேல் கூரை மீது ஏறி அமர்ந்து உள்ளனர். கருவாமொழி ஆற்று பாலத்தின் அருகே வசிக்கும் 15 குடும்பங்கள் நிவாரண முகாமுக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையே பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. அதேநேரம் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது. மாநிலத்துக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்துக்கு மக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு முதல்-மந்திரி பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர் மழையை தொடர்ந்து மீட்பு பணியில் உதவ பாதுகாப்பு படையின் உதவியை மாநில அரசு கோரியது. இதையடுத்து, மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையுடன் ராணுவம் மற்றும் விமானப்படையும் களம் இறங்கியுள்ளது. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் உள்ள மலைக்கிராம பகுதிகளுக்கு பாதுகாப்பு படை மீட்பு பணிகளுக்காக விரைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கோட்டயம், பத்தினம் திட்டா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools