X

கேரளாவில் தென்மேற்கு பருவமழை 8 ஆம் தேதி தொடங்குகிறது

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். அதன்படி, இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்றும் ஜூன் 6-ந்தேதி மழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது இதில் மேலும் தாமதம் ஏற்பட்டு வருகிற 8-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை தற்போது மாலத்தீவுகள், குமரி கடல் பகுதிகள் தெற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் மிதமாக காணப்படுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியிலும் அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை அறிகுறிகள் அதிகரிக்கும்.

இதேபோல தெற்கு அரபிக்கடலின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் வருகிற 8-ந்தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு அதிகரித்து உள்ளது. இதற்கான சாதகமான சூழ்நிலை இப்போதை தென்பட தொடங்கி விட்டது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைநெட்டும் வருகிற 8-ந்தேதி தென்மேற்கு பருவமழை பெய்யுமென்றும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் அடிக்கிறது. குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.

இதனால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை பொதுமக்களும், விவசாயிகளும் ஆவலுடன் எதிர் பார்த்துள்ளனர்.

Tags: south news