கேரளாவில் பிரம்மாண்ட படகு போட்டி – நாளை துவங்குகிறது

உலக அளவில் பிரசித்தி பெற்றது, கேரளாவில் நடைபெறும் படகுப்போட்டிகள். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னமடா ஏரியில் நடைபெறும் நேரு டிராபி படகுப்போட்டியை காண உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவது வழக்கம். அதிலும் இங்கு நடைபெறும் பாம்பு படகுகள் (150 அடி நீளமுள்ள படகில் சுமார் 100 துடுப்பு மனிதர்களால் இயக்கப்படுகின்றன) இந்த அணிவகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கும்.

புகழ்பெற்ற இந்த படகு போட்டி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ‘ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர்’ என்று அழைக்கப்படும் 68வது பந்தயப்போட்டி புன்னமடா ஏரியில் நாளை (4-ந்தேதி) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஏராளமான படகு குழாம் கழகங்கள் தயாராகி உள்ளன. இதுவரை 20 பாம்பு படகுகள் உள்பட 77 படகுகள் பங்கேற்க பதிவு செய்துள்ளன.

நாளை மதியம் 2.30 மணிக்கு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் போட்டியை தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவுக்குப் பிறகு, போட்டிகள் 3 மணிக்குத் தொடங்குகிறது. ஹீட் சுற்றுகள் தலா 4 அணிகளுடன் நடத்தப்படும். இதில் முதலாவதாக வரும் அணிகள் இறுதிப்போட்டியில் போட்டியிடும்.

இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் பாம்பு படகுக்கு நேரு கோப்பை வழங்கப்படுகிறது. தற்போது வரை டிக்கெட் விற்பனை ரூ.23 லட்சத்தை எட்டியுள்ளது. இது ரூ. 50 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியை காண ஏராளமானோர் கேரளா வந்துள்ளதால் போட் ஹவுசுகள், ஓட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் நிறைந்துள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்க தலா ரூ.80 லட்சம் வரை படகு குழாம்கள் செலவழிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools