X

கேரளாவில் வடகிழக்கு பருவமழை இம்மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது

கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவ மழை மூலம் போதுமான அளவு மழை பொழிவு கேரளாவுக்கு கிடைக்கவில்லை. அதன்பிறகுதான் மழை தீவிரம் அடைந்து ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அதிக மழை பெய்தது.

இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ள சேதம் ஏற்பட்டது. நிலச்சரிவிலும், மழை வெள்ளத்திலும் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் நேற்றுடன் (30-ந்தேதி) தென்மேற்கு பருவமழை கேரளாவில் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின்போது கேரளாவில் இயல்பை காட்டிலும் 14 சதவீதம் அதிக மழை பெய்து உள்ளது.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை முடிவடைந்த மறுநாளே வடகிழக்கு பருவ மழை கேரளாவில் தொடங்கி விடும். அதன்படி இன்று (1-ந்தேதி) வடகிழக்கு பருவ மழை தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால் கேரளாவில் வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்கவில்லை. தற்போது உள்ள நிலவரப்படி இந்த மாதம் 2-வது வாரம்தான் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. கொச்சியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி மனோஜ் இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.

Tags: south news