கொடநாடு கொலை வழக்கு – 4 பேருக்கு சம்மன் அனுப்பிய சிபிசிஐடி போலீஸ்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயான் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி அவற்றை வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மேலும் 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். கொடநாடு எஸ்டேட் பணியாளர்கள் தேவன், ரமேஷ் மற்றும் சயானின் நண்பர்கள் பாபு, அப்துல்காதர் ஆகிய 4 பேருக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

அவர்கள் 4 பேரும் தனித்தனியாக நாளை(30-ந் தேதி) கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ்நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற த்தில் நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கேரள மாநிலத்தை சேர்ந்த வாளையார் மனோஜ் ஆஜர் ஆனார். அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர் வருகிற ஜூன் மாதம் 21-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

பின்னர் அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற பங்களாவில் தடவியல் நிபுணர் குழு உட்பட பல்வேறு துறையினர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது எதிர்தரப்பினர் பங்களாவிற்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருவதால், எதிர்தரப்பினர் பங்களாவில் ஆய்வு மேற்கொண்டால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என அரசு தரப்பு சார்பில் நீதிபதியிடம் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools