கொரோனா தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்த முடியாது – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் யாரையும் கொரோனா தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், தடுப்பூசி சான்றிதழ்களை பொது இடங்களில் காண்பிக்கும் கட்டாயத்தில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் எவாரா பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:-

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஒரு தனிநபரின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக  தடுப்பூசி செலுத்துவது பரிந்துரைக்கப்படவில்லை.

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மக்கள் நலன் கருதியே தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் நலன் கருதி தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி அச்சு, எலக்ட்ரானிக் ஊடகம், சமூக வலைதளம் என எல்லாவற்றிலுமே விளம்பரங்கள் செய்யப்படுகிறது. இதை செயல்படுத்தவே சுகாதார துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி சான்றிதழை கையோடு எடுத்துச் செல்லுமாறு எவ்வித உத்தரவும் மத்திய அரசு சார்பில் பிறப்பிக்கப்படவில்லை.

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools