X

கொரோனா பாதிப்பில் முதல் இடத்தை பிடித்த தமிழகம் – அதிகாரிகள் அச்சம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 9-ந்தேதி அன்று தினசரி பாதிப்பு 28,897 ஆக இருந்தது. அது அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரித்தது.

மே 12-ந்தேதியன்று தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது. அன்று 30,355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதன்பிறகும் கொரோனா பாதிப்பு விறுவிறுவென உயர்ந்து கொண்டே சென்றது. மே 14-ந்தேதி தினசரி பாதிப்பு 32 ஆயிரத்தை நெருங்கி இருந்தது. அன்று 31,892 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

அதற்கு அடுத்த நாள் (மே 15) 33,658 பேரும், மே 16-ந்தேதி 33,181 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருந்தார்கள்.

இதன்பிறகு கடந்த 2 நாட்களாக தினசரி தொற்று சற்று குறைவாக இருந்தது. மே 17-ந்தேதி 33,075 பேரும், மே 18-ந்தேதி 33,059 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருந்தார்கள். அடுத்தடுத்த நாட்களில் இந்த பாதிப்பு மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு யாரும் எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளது. நேற்று 34,875 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் முதல் முறையாக தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோன்று கொரோனாவால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. கடந்த 5-ந்தேதி தினசரி உயிரிழப்பு 167 ஆக இருந்தது. இது அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரித்தது.

மே 15-ந்தேதியன்று தினசரி உயிரிழப்பு படிப்படியாக உயர்ந்து 300-ஐ தாண்டியது.

கடந்த 4 நாட்களாக தினசரி உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 364 ஆக இருந்த தினசரி உயிரிழப்பு நேற்று 365 ஆக அதிகரித்துள்ளது.

இந்த மாதத்தில் தினசரி உயிரிழப்புகளில் அதிகபட்சமாக நேற்று தான் 365 பேர் பலியாகி உள்ளனர். அதே போன்று தினசரி பாதிப்புகளும் நேற்று 34,875 பேர் பாதிக்கப்பட்டதே அதிகபட்ச பாதிப்பாக பதிவாகி உள்ளது.