X

கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி உதவி தொகை – முதலமைச்சர் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் தமிழக-கேரளா எல்லையில் சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடியில் களியக்காவிளை போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

களியக்காவிளை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு 10 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து கார் ஒன்று அங்கு வந்தது. அதை சோதனையிட வில்சன் முயன்றார்.

அப்போது அங்கு வந்த 2 பேருக்கும், வில்சனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் வில்சனை கத்தியால் குத்தியதோடு துப்பாக்கியாலும் சுட்டனர். வில்சனின் நெஞ்சிலும், வயிற்றிலும் குண்டு பாய்ந்தது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த வில்சன், சுருண்டு விழுந்து உயிருக்காக போராடினார்.

இதுசம்பந்தமாக பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து, அங்கு வந்த களியக்காவிளை போலீசார், வில்சனை குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு சென்றனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் உதவியோடு சம்பவத்தை அறிந்தனர். அந்த கேமராக்களில் 2 கொலையாளிகள் தென்பட்டனர். அதை வைத்து விசாரணையை போலீசார் தொடங்கினர்.

அதில் கொலையாளிகள் 2 பேரும் கேரளாவுக்கு தப்பி ஓடிவிட்டதாக தகவல் கிடைத்தது. எனவே கேரளா போலீசாரை தமிழக போலீசார் தொடர்புகொண்டு உதவியை நாடினர்.

கேரளா போலீசார் கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளை பார்த்து 2 பேரை அடையாளம் கண்டுபிடித்தனர். அவர்கள் தவுபிக், அல்துல் சமீம் ஆகியோர் என்று தெரிவித்த போலீசார் அந்த பயங்கரவாதிகள் 2 பேரின் படங்களையும் வெளியிட்டனர். அவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் சன்மானம் வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளனர்.

தமிழக டி.ஜி.பி. திரிபாதியும் நேரில் சென்று விசாரணை நடத்தினார். வில்சனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். கொலையாளிகளைப் பிடிப்பதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு-கேரள மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் 8-ந் தேதியன்று இரவு 8 மணி முதல் பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை இரவு சுமார் 9.30 மணியளவில் அங்கு வந்த இரண்டு பேர், கைத்துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டு, நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல், கருணை அடிப்படையிலான அரசுப் பணி வழங்கப்படும் என்றும் 9-ந் தேதியன்று சட்டசபையில் அறிவித்து இருந்தேன்.

வில்சனின் உயரிய தியாகத்தை கருத்தில் கொண்டு சிறப்பினமாக அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: south news