X

கோவிலில் சாமி சிலையை உடைத்த மர்ம மனிதர்கள்!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தொப்ப பாளையத்தில் புகழ்மிக்க பொன் காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான காளியண்ணன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் கூரை காளியண்ணன், விளைய காளியண்ணன் என்ற 6 அடி உயரத்தில் 2 சாமி சிலைகள் உள்ளன.

இந்த கோவில் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் ஆகும். பொன் காளியம்மன் கோவில் பொங்கல் விழா அன்று இந்த சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 10 பேர் கொண்ட கும்பல் கோவில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

இதில் அனைவரும் முகம் தெரியாதபடி துணியால் மூடி இருந்தனர். கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்த அந்த முகமூடி கும்பல் கோவில் வளாகத்தில் இருந்த கூரை காளியண்ணன் மற்றும் விளைய காளியண்ணன் ஆகிய 6 அடி சிலைகளை அடித்து நொறுக்கினர்.

2 சிலைகளையும் கீழே படுக்க வைத்து சம்மட்டி மற்றும் இரும்பு கம்பிகளால் ஆக்ரோ‌ஷமாக அடித்து உடைத்தனர். இதில் சாமி சிலைகளின் கை-கால்கள் துண்டானது. சிலைகள் முழுவதும் சேதம் ஆனது.

அதன் பிறகு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. இன்று காலை இந்த சம்பவம் குறித்து தகவல் பொதுமக்களுக்கு தெரிய வந்தது. இதனால் கோவில் முன் பொதுமக்கள், பக்தர்கள் குவிந்தனர். இதையொட்டி அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் விரைந்தார். அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதையொட்டி அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

முகமூடி கும்பலை சேர்ந்தவர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே நுழைவதும் பிறகு பெரிய சம்மட்டிகளால் சிலைகளை ஆவேசமாக உடைப்பதும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இதில் அனைவரும் முகமூடி அணிந்திருப்பதால் அடையாளம் தெரியவில்லை.

இதனால் உடல் அங்க அடையாளங்களை வைத்து சிவகிரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த கிராம தலைவர்கள் கூறும்போது, ‘‘சாமி சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினர்.

Tags: south news