சச்சி, ராகுல் பெயர்களை கலந்து தன் மகனுக்கு பெயர் வைக்கவில்லை – நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தந்தை விளக்கம்

இந்தியாவில் நடந்து வரும் உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி வருகிறார். லீக் போட்டிகளின் முடிவில் 565 ரன்கள் எடுத்துள்ள அவர், இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களில் ஒருவராக உள்ளார்.

23 வயதிலேயே ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையும் அவர் முறியடித்தார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவின் குடும்பம் பெங்களூருவில் இருந்து நியூசிலாந்து சென்றதால், அந்நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட துவங்கி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட துவங்கியுள்ளார்.

இந்திய வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயர்களைக் கலந்து ரச்சின் ரவீந்திரா என அவரது பெற்றோர் பெயர் சூட்டியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோர் பெயரை கலந்து தமது மகனுக்கு பெயர் சூட்டவில்லை என ரச்சின் ரவீந்திரா தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ரவ் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

ரச்சின் பிறந்தபோது என்னுடைய மனைவி தான் இந்தப் பெயரை பரிந்துரைத்தார். அதைப்பற்றி மேற்கொண்டு விவாதிப்பதற்கு நாங்கள் நிறைய நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பெயர் நன்றாக, எளிதாக, சிறியதாக இருந்ததால் நாங்கள் அதை வைக்கலாம் என்று முடிவெடுத்தோம். சில வருடங்கள் கழித்துதான் அது ராகுல் மற்றும் சச்சின் ஆகியோரின் பெயரைக் கொண்ட கலவையாக இருப்பதை நாங்களே உணர்ந்தோம்.

ரச்சின் கிரிக்கெட்டராக வரவேண்டும் என்பது போன்ற எண்ணத்துடன் நாங்கள் அவருக்கு இந்தப் பெயரை சூட்டவில்லை என தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports