X

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவில் நடை திறந்த நாள் முதல் அங்கு சென்ற இளம்பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ள கேரள அரசு, சபரிமலை செல்ல விரும்பும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க தொடங்கியது.

இந்த நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு கொயிலாண்டியைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகியோர் கடந்த மாதம் 24-ம் தேதி அதிகாலை இருமுடி கட்டி பம்பையில் இருந்து சன்னிதானம் புறப்பட்டனர். பம்பை போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவர்கள் அப்பாச்சிமேடு வரை தடங்கலின்றி நடந்து சென்றனர்.

அப்பாச்சிமேடு சென்றதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் திடீரென அங்கு குவிந்து போராட்டம் நடத்தியதால் அவர்களை மேற்கொண்டு அழைத்துச் செல்ல முடியவில்லை. போராட்டம் தீவிரமடைந்ததால் பெண்கள் இருவரும் சபரிமலையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், அவர்கள் நேற்று மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 3.45 மணிக்கு இருவரும் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் 18 படி ஏறாமல் மற்றொரு வாசல் வழியாகச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பெண்கள் இருவரும் கோவிலுக்குள் செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.