சமூக வலைதளப் பக்கங்களில் தேசிய கொடியை வையுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் வானொலியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார். அப்போது 75-வது சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண தேசிய கொடியை வீடுகள்தோறும் ஏற்றுவது மக்கள் இயக்கமாக மாறி வருவதாக தெரிவித்தார்.

மேலும் ஆகஸ்டு 2-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அனைவரும் சமூக வலைதள பக்கங்களில் காட்சிப்படமாக மூவர்ண கொடியை வைத்திருக்குமாறும் தெரிவித்தார். இதை நினைவுபடுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி கலாசாரம் மற்றும் சாதனைகளின் வரலாற்றை கொண்டாடும் இந்த வேளையில் நமது மூவர்ண தேசிய கொடியை கொண்டாடும் இயக்கத்துக்கு நம் தேசம் தயாராகி வருகிறது. எனது சமூக வலைதள பக்கங்களில் காட்சி படத்தை (டி.பி.) மாற்றி மூவர்ண தேசிய கொடியை வைத்துள்ளேன். நீங்கள் அனைவரும் அதுபோலவே இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை உங்களின் சமூக வலைதள பக்கங்களில் காட்சிப்படமாக மூவர்ண தேசிய கொடியை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாம் மிகவும் பெருமைபடக்கூடிய மூவர்ண தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது முயற்சிகளுக்கு நமது தேசம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கும். மூவர்ண கொடியின் வலிமையையும், உத்வேகத்தையும் எடுத்துக்கொண்டு தேச முன்னேற்றத்துக்காக தொடர்ந்து பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools