X

சர்வதேச மகளிர் தினம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

பெண்களின் சிறப்பினையும், உரிமைகளையும் உலகிற்கு பறை சாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8-ம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த இனிய நாளில் அனைத்து மகளிர்க்கும் எனது உளங்கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்களின் வாழ்வு மேன்மையுற அம்மாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு, பெண் சிசுக் கொலையைத் தடுத்திட தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், வளரிளம் பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம், உழைக்கும் மகளிர் பயன்பெறும் வகையில் அம்மா இருசக்கர வாகனத் திட்டம் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்களை மகளிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தி வருகிறது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் அவசர கால அழைப்புகளுக்கு காவல்துறை, மருத்துவம், சட்ட உதவி, உளவியல் ஆலோசனை மற்றும் அரசின் திட்டங்கள் போன்ற சேவைகளை உடனடியாக பெறும் வகையில் 24 மணி நேரமும் செயல்பட கூடிய மகளிர் உதவிமையம் மூலம் 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி அமைக்கப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு “பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம்” என்ற மத்திய அரசின் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநில விருதும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சிறந்த மாவட்ட விருதும், குழந்தை திருமணத்தை தானே தடுத்து நிறுத்தியதற்காக நந்தினிக்கு உள்ளூர் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளன.

பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், பெண்களுக்கான அதிகாரத்தை பாதுகாக்கும் விதமாக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காகவும், தேசிய அளவிலான 2019-ம் ஆண்டிற்கான நாரிசக்தி புரஸ்கார் விருதுக்கு தமிழக அரசு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டு, வாழ்வில் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, இருளை நீக்கும் ஒளி விளக்காக பாரினில் பெண்கள் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று வாழ்த்தி, மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.