சீனாவில் வாங்கும் திறன் வரலாறு காணாத வகையில் குறைந்தது

உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றான சீன பொருளாதாரம் குறித்து ஒரு வியப்பான தகவல் வெளியாகியிருக்கிறது. சீனாவில் நுகர்வோரின் வாங்கும் திறன் எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறி வந்தனர்.

அதேபோல் சீனாவில் இருந்து கிடைக்கும் பொருளாதார தகவல்கள், கோவிட் தொற்று நோய்க்கு பிந்தைய வர்த்தக எழுச்சி, எதிர்பார்த்ததை போல் நீடிக்கவோ, அதிகரிக்கவோ இல்லை என்றும் மாறாக குறைந்து வருவதாகவும் தெரிவிக்கின்றன. இதனால் நுகர்வோர்களின் வாங்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் நுகர்வோர் பொருட்களுக்கான வியாபாரங்களில் ஜாம்பவானான திகழும் யூனிலீவர் (Unilever), சீனாவில் ரியல் எஸ்டேட் மற்றும் ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்து வருவதால், நுகர்வோரின் வாங்கும் சக்தி, வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளது என தெரிவித்தது.

ஆனால் வியப்பூட்டும் விதமாக, ஆணுறைகளின் விற்பனை குறையவில்லை என்று டியூரெக்ஸ் (Durex) ஆணுறைகளை தயாரிக்கும் பிரிட்டன் நாட்டை தளமாக கொண்ட பன்னாட்டு நிறுவனமான ரெக்கிட் (Reckitt) தெரிவித்துள்ளது. ரெக்கிட் நிறுவனம் அதன் வருவாய் முடிவுகளை அறிவித்தபோது, அதன் சுகாதார பொருட்கள் விற்பனை பிரிவின் வர்த்தகத்தில் நிகர வருவாய் வளர்ச்சி 8.8% என அறிவித்தது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அதன் தலைமை நிர்வாக அதிகாரி, நிகான்ட்ரோ டுரான்டே (Nicandro Durante) தெரிவித்திருப்பதாவது:- எங்கள் தயாரிப்புகளில், நெருக்கமான உறவுகளுக்கான ஆரோக்கிய (intimate wellness) பொருட்களின் விற்பனை சீராக உள்ளது.

ஆணுறைகள், K-Y லூப்ரிகண்ட் உள்ளிட்ட பொருட்களால் இந்த வளர்ச்சி சாத்தியமாகியிருக்கிறது. ஆணுறை தயாரிப்புகளில் புது பொருட்களை உபயோகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். பாலியூரிதேன் கொண்டு தயாரிக்கப்படும் மிக மெல்லிய ஆணுறைகளை சீன சந்தைக்காக டைகாங்க் பகுதியில் உற்பத்தி செய்ய போகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். பொருளாதாரம் ஆட்டம் கண்டாலும், சீனர்களின் ஆட்டம் குறையவில்லை என இதுகுறித்து கிண்டலாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news