X

சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்த கிரிக்கெட் வீரர் டோனி

இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, இந்திய அணிக்கு டி20, ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளை வென்று தந்துள்ளார். இது தவிர ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்கு தலைமை தாங்கும் தோனி 4 முறை தொடரை வென்று தந்துள்ளார். இதனால் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் தற்போது எம்.எஸ். தோனி ‘அதர்வா: தி ஒரிஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் கதாநாயகனாகவும் அறிமுகமாகவுள்ளார்.

விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து, ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதும் ‘அதர்வா: தி ஒரிஜின்’என்ற கிராபிக்ஸ் நாவலில் வரும் சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்துக்கு எம்.எஸ்.தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கிராஃபிக் நாவலுக்கான மோஷன் போஸ்டரை தோனி தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வரலாற்றுக் கதையை பின்னணியாக கொண்ட இந்த கிராஃபிக் நாவலில் தோனியின் தோற்றம் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நாவலுக்காக 150 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இதுகுறித்து தோனி கூறியதாவது:-

‘அதர்வா: தி ஒரிஜின்’நாவலில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.  இது வாசகர்களிடையே ஆர்வத்தை தூண்டக் கூடிய, விறுவிறுப்பான கதைக்களம், அட்டகாசமான ஓவியங்களை கொண்ட கிராஃபிக் நாவல் ஆகும். இந்தியாவின் முதல் புராண சூப்பர்ஹீரோவை அறிமுகப்படுத்தும் எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் முயற்சி ஒவ்வொரு வாசகரையும் மென்மேலும் படிக்கத் தூண்டக்கூடியதாக அமையும்.

இவ்வாறு தோனி கூறியுள்ளார்.

இது குறித்து ரமேஷ் தமிழ்மணி கூறுகையில், இது என் இதயத்துக்கு நெருக்கமான கனவு படைப்பு. இதை நாங்கள் உருவாக்க பல ஆண்டுகளை செலவு செய்துள்ளோம். அதர்வா கதாபாத்திரத்தில் தோனி தோன்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என கூறினார்.

இந்த காமிக்ஸ் விரைவில் அமேசான் தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.