X

சென்னையில் முககவசம் அணிவது கட்டாயம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Young family with daughter wearing protective surgical face masks during the Covid-19 or coronavirus pandemic

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் சார்பில் கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள், வார இறுதி நாட்களில் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், மாநகராட்சியில் 16 சமுதாய நல மையங்களில் தொண்டை தடவல் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. கோவிட் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் அருகிலுள்ள மையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். கோவிட் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுத் தனிமையில் உள்ளபோது அரசின் வழிகாட்டு நெறி முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். வீட்டில் உள்ள பிற நபர்களும் முகக்கவசம் அணிந்து இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொற்று பாதித்த நபர்கள் வீட்டுத் தனிமையில் (அ) மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்வதா என்பதை மருத்துவர்கள் ஆலோசனையைப் பெற்று சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 1,10,34,921 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், 97.69 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 86.62 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 6,02,998 முன்எச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இதுவரை 37 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் 43,97,550 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு சில மாதங்களாக கோவிட் தொற்று பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. நேற்றைய தினம் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து உள்ளது. எனவே, பண்டிகை கால விடுமுறைகள் நெருங்கி வரும் வேளையில் கோவிட் தொற்று பரவாமல் தடுக்க மக்கள் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும், கோவிட் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் சளி, காய்ச்சல் இருப்பின் சுய சிகிச்சை மேற்கொள்ளாமல் மருத்து வர்களை அணுகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.