X

சென்னையில் 10 நாட்களுக்கு கன மழை!

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாக வானிலை இலாகா அறிவித்துள்து. இன்று மாலைக்குள் தாழ்வு மண்டலம் உருவாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மாநிலம் முழுவதும் மிதமான மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தநிலையில் தனியார் வானிலை ஆய்வு நிபுணரான பிரதீப் ஜான் தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்களுக்கு பலத்த மழை கொட்டும் என்று கூறியுள்ளார்.

வருகிற 27-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 10 நாட்களுக்கு மழை இருக்கும் என்று கூறுவதால் தீபாவளிஅன்றும் பலத்த மழை பெய்யும். குறிப்பாக வட தமிழ்நாட்டில் அதிகம் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை உட்பட வட மாவட்டங்களில் தீபாவளி அன்று பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கின்றனர். இதனால் தீபாவளி கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படும்.

ஏற்கனவே பட்டாசுகளை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும்தான் வெடிக்க வேண்டும் என்று மாநில சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையில் ஒரு மணி நேரமும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரமும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

தீபாவளி அன்று பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால் அரசு ஒதுக்கியுள்ள அந்த நேரத்தில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே பட்டாசு வெடிக்க முடியாத நிலை ஏற்படலாம். இது தீபாவளி கொண்டாட்டத்தை பாதிக்கும் செயலாக அமைந்து விடும்.

மழை தொடர்பாக வானிலை நிபுணர் பிரதீப் ஜான் மேலும் கூறியிருதாவது:-

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சென்னை அதை சுற்றியுள்ள பகுதிகளில் மிக அதிக மழை பெய்யலாம். அதாவது வடதமிழ்நாடு, தெற்கு ஆந்திர பகுதி, கடலோர பகுதி, டெல்டா பகுதி, மாநில உள்பகுதியில் உள்ள தேனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை ஒருவார காலத்திற்கு இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 9 மணி வரை தொடர்ந்து மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: south news