சென்னை குடிநீர் வாரியத்தின் அதிரடி திட்டம்

சென்னையில் வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் குடிநீர் வாரியம் குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் செய்து வருகிறது.

வணிக நிறுவனங்கள், பகுதி வணிக கட்டிடங்களுக்கு மீட்டர் பொருத்தப்பட்டு ஆண்டுக்கு 2 முறை வீதம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை தற்போது உள்ளது.

இந்த மீட்டர்கள் முறையாக தண்ணீரை கணக்கிடுவதில் தவறுகளும், குளறுபடிகளும் இருந்து வருவதால் குடிநீர் வினியோகத்தை கணக்கிட முடியவில்லை.

ஓட்டல்கள், வணிக கட்டிடங்கள் அதிகளவு குடிநீரை பயன்படுத்துகின்றன. ஆனால் சரியாக கணக்கிட முடியாமல் குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதேபோல அடுக்குமாடு வீடுகள், பங்களாக்கள், வாடகை குடியிருப்புகள் போன்றவற்றிலும் குடிநீர் பயன்படுத்துவதை அளவிட முடியாமல் குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் குடிநீர் இணைப்புகள் மட்டுமின்றி வீடுகளுக்கும் அவர்கள் பயன்படுத்தும் குடிநீருக்கு ஏற்றாற்போல் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் சென்னையில் அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், பெசன்ட்நகர் பகுதியில் இதனை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 600 டிஜிட்டல் குடிநீர் மீட்டரை பொருத்தி செயல்படுத்துகிறது. அதனை தொடர்ந்து 6 மாதங்களில் 12,708 டிஜிட்டல் மீட்டர்களை வணிக நிறுவனங்கள், பகுதி வணிக கட்டிடங்களில் நிறுவப்பட உள்ளது. இதுதவிர மாதம் 5 லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்துகின்ற வீடுகள், கட்டிடங்களிலும் டிஜிட்டல் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மீட்டருக்கு பதிலாக டிஜிட்டல் மீட்டர் மாற்றி பொருத்தப்படும்.

படிப்படியாக அனைத்து வீடுகளுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது. நவீன டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்படுவதன் மூலம் வீடுகளில் தண்ணீர் பயன்படுத்தும் அளவிற்கு கட்டணத்தை வசூலிக்க முடியும் என்று குடிநீர் வாரியம் நம்புகிறது.

எந்த அளவுக்கு குடிநீரை பயன்படுத்துகிறார்களோ அதற்கேற்ப கட்டணத்தை வரும் காலங்களில் செலுத்த வேண்டிய நிலை வரும். இத்திட்டத்தை முதலில் வணிக ரீதியாக செயல்படும் நிறுவனங்கள், ஓட்டல்கள், மால்களுக்கு கொண்டு வந்து பின்னர் வீடுகளுக்கும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் குடிநீர் வாரியத்துக்கு வருவாய் அதிகரிப்பதோடு தண்ணீரும் கணக்கீடு செய்து செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools