X

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. சிறு சிறு தூறலாக பெய்தாலும் ஒரு சில பகுதிகளில் வேகமாகவும் மழை பெய்தது.

நேற்று பகல் முழுவதும் மப்பும் மந்தாரமாக காணப்பட்ட நிலையில் இரவில் மீண்டும் லேசாக மழை பெய்தது. விடிய விடிய பல இடங்களில் மழை பெய்தது. சென்னை மாநகரத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது.

காலையில் இருந்து மழை பெய்து வருவதால் வேலைக்கு செல்லக் கூடியவர்கள் நனைந்தவாறு சென்றனர். ஆயுதபூஜை விடுமுறைக்கு பிறகு இன்று அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் திறக்கப்பட்டதால் ஊழியர்கள் வேலைக்கு சென்றனர். இதனால் மாநகர பஸ்கள், மின்சார ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்தாலும் சாலையில் மழைநீர் தேங்கவில்லை. உடனுக்குடன் மழைநீர் வடிந்து விடுகின்றன. சாலைகளில் உள்ள குழிகளில் மட்டுமே மழைநீர் தேங்கி நின்றது. பெரும்பாலான இடங்களில் நடைபெற்று வந்த மழைநீர் கால்வாய் பணிகளும் முடிந்துவிட்டதால் தண்ணீர் தேங்கவில்லை.

கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை, புழல், செங்குன்றம், சோழவரம், திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. வெளியூர் சென்ற மக்கள் பஸ், ரெயில்கள் மூலம் சென்னை திரும்பினர். அவர்கள் கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் வீடுகளுக்கு செல்ல பஸ்சுக்காகவும், ஆட்டோ, கார்களுக்காகவும் காத்து இருந்தனர். இதனால் பஸ், ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சென்னை மற்றும் மாநகர பகுதியில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி மழைவிட்டு விட்டு பெய்து வருகிறது.