X

‘சைக்கோ’ மிஷ்கின் படம் – உதயநிதி பேட்டி

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கி இருக்கும் இந்த படத்தை டபுள் மீனிங் புரோடக்‌‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜனவரி 24-ந் தேதி திரைக்கு வருகிறது.

சைக்கோ படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:- யுத்தம் செய் படத்திலேயே மிஷ்கினுடன் இணைந்திருக்க வேண்டியது. அது நடக்கவில்லை. மீண்டும் அவருடன் இணைய ஆர்வமாக இருந்தேன். முதலில் ஏலியன் கதை ஒன்று சொன்னார். எனக்கு புரியவில்லை. இந்த கதையை இருவரி மட்டும் தான் சொன்னார். உடனே சம்மதித்துவிட்டேன். இது முழுக்க முழுக்க மிஷ்கின் படம்.

மனிதன் படத்துக்கு பிறகு சவாலான வேடங்களில் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறேன். இயக்குனரிடம் என்னை முழுக்க ஒப்படைத்து விடுகிறேன். மிஷ்கின் சொன்னதை அப்படியே செய்தேன். ’சைக்கோ’ கதைக்கு தேவையான டைட்டில். நாயகனுக்கும் சைக்கோ கொலையாளிக்கும் இடையேயான மோதல் தான் கதை. கவுதம் என்னும் கண் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என் படங்களில் வன்முறை, ரத்தம் இருக்காது. ஆனால் இது அப்படி இல்லை.

பார்வையற்றவராக நடித்த அனுபவம் குறித்து பேசிய உதயநிதி, இந்தியில் வெளியான அந்தாதூன் படத்தில் நாயகன் லென்ஸ் அணிந்து நடித்ததாக கேள்விப்பட்டேன். தேடி பிடித்து அந்த லென்சை வாங்கி போட்டு வீடியோ எடுத்து மிஷ்கினுக்கு அனுப்பினேன். ஆனால் அவர் சூப்பர் என்று சொல்லிவிட்டு இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கண்ணாடி அணிந்தால் போதும் என்று சொன்னார். ஆனால் அவருக்கே தெரியாமல் சில காட்சிகளில் அந்த லென்ஸ் அணிந்து நடித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.