சொகுசு காரில் வந்து டீ விற்கும் மும்பை வாலிபர்கள்

சொகுசு கார்களை பலர் தங்கள் வாழ்நாள் கனவாக வைத்திருப்பார்கள். ஆனால் ஆடம்பரம் நிறைந்த அந்த காரை ஒரு டீக்கடையாக நினைத்து பார்க்க முடியுமா!. ஆனால் மும்பையில் 2 வாலிபர்கள் தங்கள் சொகுசு காரை டீக்கடையாக மாற்றி, பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.

மன்னு சர்மா மற்றும் அமித் கஷ்யப் ஆகியோர் தான் அந்த வாலிபர்கள். அவர்கள் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரின் டிக்கியில் 20 ரூபாய்க்கு டீ விற்கின்றனர். அந்தேரி மேற்கு புறநகர் பகுதியில் உள்ள லோகந்தவாலாவில் அவர்கள் 6 மாதங்களாக இந்த சொகுசு கார் டீக் கடையை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் அவர்களின் இந்த டீக்கடை சமூக வலைதளங்களில் பிரபலமானது. இதனால் கடைக்கு கூட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் வாலிபர்களின் தனித்துவமான எண்ணம் மட்டும் அல்ல, ‘டீ’யின் சுவையும் தான் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதாக கூறுகின்றனர்.

அதற்கு ஏற்றார்போல் அங்கு வரும் வாடிக்கையாளர் ஒருவர்,  “கடந்த 2 மாதங்களாக நான் இங்கு ‘டீ’ குடிக்க வருகிறேன். ஏனென்றால் அதன் சுவை அற்புதமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் நான் இந்த பகுதியை கடந்து செல்லும்போது அவர்களின் ‘டீ’யை வாங்கி குடிக்க விரும்புகிறேன்” என்கிறார். இந்த நூதன முயற்சி குறித்து மன்னு சர்மா கூறியதாவது:-

நாங்கள் இரவில் ஒருநாள் ‘டீ’ குடிப்பதற்காக அலைந்து கொண்டிருந்தோம். ஆனால் அந்த நேரத்தில் டீக்கடையை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தான் சொந்தமாக ‘டீ’ ஸ்டாலை திறக்க திட்டமிட்டோம். நாங்கள் சொகுசு காரில் டீ விற்பதன் மூலம் பொருளாதார வசதி இல்லாதவர்கள் மட்டும் தான் டீ விற்பார்கள் என்ற எண்ணம் தவறு என்பதை நிரூபித்துவிட்டோம்.

இங்கு சைக்கிளில் செல்பவர்களும் டீ குடிக்கிறார். அதேபோல சொகுசு காரில் வருபவர்களும் எங்கள் ‘டீ’யை ருசிக்கிறார்கள். இருவரும் ஒரு மாதம் பல்வேறு சமையல் குறிப்புகளை கொண்டு வீட்டிலேயே ‘டீ’ தயாரிக்க பயிற்சி செய்து, இறுதியில் ஒரு செய்முறையை உறுதி செய்தோம். பின்னர் சொகுசு காரில் டீ விற்பனை செய்ய தொடங்கினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

டீ கடை தொடங்குவதற்கு முன்பு அரியானாவை சேர்ந்த மன்னு சர்மா ஆப்பிரிக்க நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அதேபோல அமித் கஷ்யப் காலையில் பங்கு சந்தை வர்த்தகராகவும் மாலையில் டீ கடைக்காரராகவும் மாறியுள்ளார். இவர்கள் வருங்காலத்தில் பல்வேறு பகுதிகளில் இதேபோன்ற டீ கடைகளை திறக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools