X

ஜப்பானியர்களுக்கு சிரிக்க சொல்லிக் கொடுக்கும் கல்வி நிறுவனம் – ஒரு மணி நேரத்திற்கு ரூ.4,550

உலகளவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று உச்ச கட்டத்தை எட்டி லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனால், மக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதன் தாக்கத்தால் ஜப்பானியர்கள் சிரிக்கவே மறந்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.

கொரோனா தொற்றால் ஏற்பட்ட தாக்கம் மட்டுமல்லாமல், கொரோனா பரவாமல் இருக்க அவர்கள் கடைபிடித்த மாஸ்க் அணியும் பழக்கம் தான் முதல் காரணம் என்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக மாஸ்க் அணிந்து அவர்கள் சிரிக்கவே மறந்துவிட்டார்களாம். ஜப்பானிய அரசு கொரோனா தொற்று கட்டுப்பாடு விதியில் இருந்து மாஸ்க் அணிவதற்கு விலக்கு அளித்தபோதும், இன்னமும் பலர் மாஸ்க் அணிந்துதான் வெளியே செல்கிறார்கள்.

அங்கு 8 சதவீத மக்கள் மட்டுமே மாஸ்க் அணிவதை நிறுத்தியுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில், டோக்கியோவில் உள்ள கலை கல்வி நிறுவனம் ஒன்று சிரிக்க மறந்த ஜப்பானிய மக்களுக்கு சிரிக்க கற்றுக்கொடுக்கும் வகுப்புகளை எடுத்து வருகிறது.

முன்னாள் ரோடியோ தொகுப்பாளர் கெய்கோ கவானோ இந்த வகுப்பை எடுத்து வருகிறார். இந்த வகுப்பிற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 4,550 செலுத்தி ஜப்பானிய மக்கள் பலர் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிரிப்பின் முக்கியத்துவம் பற்றியும், எப்படி சிரிக்க வேண்டும் என்றும், ஹாலிவுட் ஸ்டைல் ஸ்மைலிங் நுட்பங்களை கற்கவும் சொல்லி கொடுக்கப்படுகிறது.

கையில் கண்ணாடி ஒன்றை வைத்துக் கொண்டு அவர்கள் சிரிக்க பயிற்சி எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.