ஜப்பானை தாக்கிய புயல்! – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவை நான்மடோல் என்கிற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் காற்றில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன.

சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்தது. கனமழை காரணமாக முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

புயல், மழையைத் தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. புயல், மழை மற்றும் வெள்ளத்தால் கியாஷூ தீவில் உள்ள பல்வேறு நகரங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

இந்நிலையில், இந்தப் புயலில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். புயலால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புயல் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. படகு போக்குவரத்து, புல்லட் ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools