ஜூன் மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை, சட்டப் போராட்டத்தின் மூலம் மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த பெருமைக்குரியவர் அம்மா. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும், தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். ஆனால், இதனைத் தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகம் திறந்து வேண்டுமென்ற நிலையில், இன்றைய நிலவரப்படி வெறும் 1.65 டி.எம்.சி. அடி நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கர்நாடகத்தால் திறந்துவிடப்பட்டு இருக்கிறது.

அண்மையில் காவேரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில், இந்த மாதத்திற்கான ஒதுக்கீட்டை உடனடியாக அளிக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டுமென்றும் தமிழ்நாடு சார்பில் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், கர்நாடகத்தின் சார்பில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்போது நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தி.மு.க. காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய உறவை வைத்திருப்பதால் முதலமைச்சர், கர்நாடக முதல்-மந்திரியுடன் பேசி, தேவையான அழுத்தத்தை கொடுத்து, ஜூன் மாதத்திற்கு அளிக்க வேண்டிய நீரினை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிடவும், ஒவ்வொரு மாதமும் உரிய நீரை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news