X

ஜெயலலிதாவின் நினைவிடத்தை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் பழனிசாமி

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் எழில்மிகு தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.50.80 கோடி செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் இத்தாலி மார்பிள், பளிங்கு கற்கள் ஆகியவை பதிக்கப்பட்டு வருகின்றன.

பீனிக்ஸ் பறவை வடிவத்தில் ஜெயலலிதா நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் விரைவில் அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணியளவில் திடீரென ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அங்கு கட்டப்பட்டு வரும் நினைவிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருக்கு அதிகாரிகள் அங்கு நடக்கும் பணிகளை விளக்கி கூறினார்கள்.

முன்னதாக ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி வணங்கினார்.

அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட கழக செயலாளர்கள் சத்யா, பாலகங்கா, விருகை ரவி, வெங்கடேஷ்பாபு, ஆதிராஜாராம், வேளச்சேரி அசோக், ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் சென்றனர்.