X

ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் இடையே பிரச்சனை ஏன் வந்தது? – பிரேமலதா விளக்கம்

விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

விஜயகாந்தின் ரோல்மாடல் எம்.ஜி.ஆர். தான். நாங்கள் வீட்டில் படுக்கையறையில் மாட்டியிருப்பது எம்.ஜிஆர்., ஜானகி அம்மாள் உள்ள படம்தான். எங்கள் திருமணம் மதுரையில் நடந்ததை தொடர்ந்து சென்னையில் எங்கள் வீட்டிற்கு வந்த ஜானகிஅம்மாள் எம்.ஜி.ஆர். பெயர் பொறித்த மோதிரத்தை பரிசாக தந்தார். அதை நாங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறோம். அதே போன்று ஜானகிஅம்மாள் விஜயகாந்திடம் யார் யாரோ வந்து எம்.ஜி.ஆரிடம் வேண்டியதை பெற்றுச்செல்கிறார்கள், நீ வந்தால் என்ன என்று கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர். பயன்படுத்திய வேனையும், உலகம் சுற்றும் வாலிபனில் பயன்படுத்திய பேன்ட் மற்றும் கோட்டையும் கொடுத்தார். அதையும் நாங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறோம்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சை கேட்டால் மன அழுத்தம் மறந்து போய்விடும். அவர் பேசும்போது 2011-ல் அமைந்த அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி சாதனை கூட்டணி என்று குறிப்பிட்டார். அப்போது எதிர்க்கட்சி என்பதே இல்லாமல் போய்விட்டது. கூட்டணியில் போட்டியிட்ட நாங்கள் தான் எதிர்க்கட்சியாக இருந்தோம். பின்னர் ஏன் பிரிந்தீர்கள் என கேட்கலாம். நம்கட்சியில் இருந்த 3 துரோகிகளை தூண்டிவிட்டு விஜயகாந்திற்கும் ஜெயலலிதாவிற்கும் கோபம் வரச்செய்து மோதல் ஏற்படுத்தினார்கள் அதன் காரணமாக பிரியும் நிலை ஏற்பட்டது.

ஜெயலலிதாவிற்கும், விஜயகாந்திற்கும் படங்களில்தான் நடிக்கதெரியுமே தவிர அரசியலில் நடிக்கத் தெரியாது. ஜெயலலிதா திறமையான பெண்மணி. அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என நானும் விஜயகாந்தும் பேசிக்கொண்டிருந்தோம்.

அதைத்தான் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் எங்களை சந்திக்க வரும்போது குறிப்பிட்டோம்.

தற்போது அமைந்துள்ள கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெற்றிபெறும். நாளை நமதே 40-ம் நமதே. தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணி அடுத்துவரும் உள்ளாட்சி தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் இனி வருங்காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தலிலும் உறுதியாக தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சாமானியனை கூட அரசியலில் உயர்த்துபவர்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் விஜயகாந்தும்தான். பிரசாரத்தின் போது தொண்டர்களோடு தொண்டராக அமர்ந்து விஜயகாந்த் சாப்பிடக்கூடியவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags: south news