X

டி.என்.பி.எல் கிரிக்கெட் – சேப்பாக் சூப்பர் கிலீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் இன்று மோதல்

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ந் தேதி நெல்லையில் தொடங்கியது. அங்கு 6 ஆட்டங்கள் நடந்தது. அதை தொடர்ந்து திண்டுக்கல்லில் 7 போட்டிகள் நடைபெற்றது. தற்போது கோவை எஸ்.என்ஆர். கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் 19 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.

நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. மதுரை பாந்தர்ஸ் 8 புள்ளியுடனும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முறையே 3 முதல் 6-வது இடங்களில் உள்ளன. திருச்சி வாரியர்ஸ் 2 புள்ளி பெற்றுள்ளது. சேலம் ஸ்பார்டன்ஸ் தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.

லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ்- அணிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

கோவை கிங்ஸ் திருச்சியை 52 விக்கெட்டிலும், சேலத்தை 8 விக்கெட்டிலும் வென்றது. திண்டுக்கல் (5 விக்கெட்), மதுரை (39 ரன்), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (5 விக்கெட்) அணிகளிடம் தோற்று இருந்தது. திருப்பூர் அணி தனது முதல் ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் திண்டுக்கல்லிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 3-வது ஆட்டத்தில் நெல்லையிடம் 6 விக்கெட்டில் தோற்றது. 4-வது போட்டியில் சேலம் அணியை 32 ரன்னில் வென்றது. இரு அணிகளும் 3-வது வெற்றிக்காக காத்திருக்கின்றன.

இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் ஆட்டத்தில் நெல்லையிடம் சூப்பர் ஓவரிலும், 2-வது போட்டியில் மதுரையிடம் 4 விக்கெட்டிலும் தோற்றது. அதைதொடர்ந்து திருச்சி வாரியர்சை 44 ரன்னிலும், கோவை கிங்சை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

திண்டுக்கல் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி, ஜெகதீசன், ராதாகிருஷ்ணன், சசிதேவ், ராதாகிருஷ்ணன், ஹரீஷ்குமார், சாய்கிஷோர், அலெக்சாண்டர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். திண்டுக்கல் அணி கோவை (5 விக்கெட்), திருப்பூர் (9 விக்கெட்) ஆகியவற்றை வீழ்த்தியது. திருச்சி (8 விக்கெட்),நெல்லை (8 விக்கெட்), மதுரை (7 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது. அந்த அணி 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.