டி.என்.பி.எல். கிரிக்கெட் – 3 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

2020-ம் ஆண்டில் நடக்கும் 5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியையொட்டி ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சம் 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 2 பேர் தமிழக அணிக்காக சீனியர் முதல்தர கிரிக்கெட்டில் பங்கேற்றவராக இருக்கலாம்.

இதன்படி நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்ஸ்மேன் கவுசிக் காந்தி, சுழற்பந்து வீச்சாளர் அலெக்சாண்டர், பேட்ஸ்மேன் சசிதேவ் ஆகியோரை தக்கவைத்துள்ளது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷய் சீனிவாசன், கணேஷ் மூர்த்தி ஆகியோரை தக்க வைத்துக் கொண்டது. இதே போல் ஷாரூக்கான், டி.நடராஜன், அஜித் ராம் ஆகியோர் கோவை கிங்ஸ் அணியிலும், அருண் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, கிரன் ஆகாஷ் மதுரை பாந்தர்சிலும், முரளிவிஜய், சாய் கிஷோர், சோனு யாதவ் ஆகியோர் திருச்சி வாரியர்சிலும், பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், ஹரிஷ் ஆகியோர் காஞ்சி வீரன்ஸ் அணியிலும், ஆர்.அஸ்வின், விவேக், சிலம்பரசன் திண்டுக்கல் டிராகன்சிலும், தினேஷ் கார்த்திக், ராஜ்குமார், மான் பாப்னா காரைக்குடி காளை அணியிலும் நீடிக்கிறார்கள்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் இன்று முதல் தங்கள் பெயரை புதிதாக பதிவு செய்துக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்திலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணையதளத்திலும் கிடைக்கும். விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாளாகும்.

இந்த தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news