டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை கவர்னர் ஆர்.என்.ரவி மீண்டும் நிராகரிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை கவர்னர் ஆர்.என்.ரவி மீண்டும் நிராகரித்து உள்ளார். வேறு நபரை பரிந்துரைக்கும்படியும் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி. தலைவராக இருந்த பாலச்சந்திரன், 2022 ஜூனில் ஓய்வுபெற்றார். அதன்பின், உறுப்பினராக உள்ள முனியநாதன், பொறுப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார். தமிழக டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு, இந்தாண்டு ஜூனில் பணி ஓய்வுபெற்றார். டி.என்.பி.எஸ்.சி. தலைவராக அவரை நியமனம் செய்வதற்கான பரிந்துரையை, கவர்னர் ரவிக்கு தமிழக அரசு ஜூலை மாதம் அனுப்பியது.

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தேர்வில், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டதா; தலைவர் தேர்வு எந்த முறையில் நடத்தப்பட்டது என பல்வேறு விளக்கங்களை கேட்டு, பரிந்துரை கடிதத்தை கவர்னர் ரவி, ஆகஸ்டில் திருப்பி அனுப்பினார். இந்த கேள்விகளுக்கு, தமிழக அரசு வாயிலாக விரிவான விளக்கம் அளித்து, மீண்டும் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால், சைலேந்திர பாபுவை நியமிக்க வேண்டும் என்ற அரசின் பரிந்துரையை ஏற்காமல், கவர்னர் ரவி நிராகரித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தேர்வு முறையில் வெளிப்படை தன்மை இல்லை. இந்த பதவியில், 62 வயது வரை உள்ளவர்களை மட்டுமே நியமிக்க முடியும்.

சைலேந்திரபாபுவை நியமித்தாலும், 6 மாதங்கள் தான் பணியில் இருப்பார். எனவே, தகுதியான வேறு ஒருவரை தேர்வு செய்யும் படி, கவர்னர் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல, டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக சிவகுமார் என்பவரை நியமிக்க, தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையையும், கவர்னர் நிராகரித்து உள்ளார்.

இந்த விவகாரத்தில், தமிழக அரசு மீண்டும் சைலேந்திர பாபுவை பரிந்துரைக்குமா அல்லது வேறு ஒரு நபரை பரிந்துரைக்குமா? என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். கவர்னரின் இந்த முடிவு குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்(டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக நேர்மையாளரான முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நியமிக்குமாறு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது. சைலேந்திரபாபுவுக்கு அந்தத் தகுதி இல்லை என்று தமிழ்நாடு அரசின் பரிந்துரையை கவர்னர் ஆர்.என்.ரவி நிராகரித்து இருப்பது அவரது அதிகார எல்லையை மீறிய தான்தோன்றித்தனமான சர்வாதிகார முடிவு ஆகும். தமிழக அரசு செய்கின்ற பரிந்துரைகளை எல்லாம் நிராகரிக்கும் கவர்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகின்ற தமிழக கவர்னருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news