X

டுலெட்- திரைப்பட விமர்சனம்

ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில், அறிமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘டுலெட்’. பல சர்வதேச விருதுகளை வென்றதோடு, பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களை பெற்ற இப்படம் எப்படி என்பதை பார்ப்போம்.

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் எப்படிப்பட்ட கஷ்ட்டங்களை எதிர்கொள்கிறார்கள், அதிலும் நடுத்தர வர்க்கத்தினர் வாடகை வீட்டாலும், வாடகை வீட்டுக்காகவும் எப்படி தங்களது சிறு சிறு சந்தோஷங்களை இழந்து வேதனையோடு வாழ்கிறார்கள், என்பது தான் இப்படத்தின் கதை.

உதவி இயக்குநராக இருக்கும் கதையின் நாயகன் சந்தோஷ் ஸ்ரீராம், தனது மனைவி, ஒரு குழந்தை என்று வாடகை வீட்டில் வசிக்கிறார். மாதம் சம்பளம் இல்லை என்றாலும், தனது துறையில் கிடைக்கும் வருமானத்தை வைத்து எளிமையான வாழ்க்கை நடத்த, திடீரென்று வீட்டு முதலாளி வீட்டை காலி செய்யும்படி கூறிவிடுகிறார். எந்தவித காரணமும் சொல்லாமல், ஒரு மாதம் மட்டும் அவகாசம் கொடுக்க, அந்த ஒரு மாதத்தில் வீடு தேடி அலையும் சந்தோஷ் ஸ்ரீராமும், அவரது மனைவியும் எதிர்கொள்ளும் மன வேதனை தான் படத்தின் திரைக்கதை.

சென்னை போன்ற மாநகரங்களில் வீடு தேடி அலைவது மற்றும் வாடகை வீட்டில் பல கட்டுப்பாடுகளுடன் வசிப்பது என்பது பெரும்பாலனவர்கள் எதிர்கொண்ட பிரச்சினையாக இருந்தாலும், இதில் நடுத்தர வர்க்கத்தினர் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இப்படம் தெளிவாக கூறியிருக்கிறது.

அத்தியாவாசிய தேவைகளில் ஒன்றான இருப்பிடத்திற்காக நடுத்தர வர்க்கத்தினர் எப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் இப்படத்திற்கு மனிதர்களின் வாழ்வியலை சொல்லிய முக்கியமான திரைப்படங்களின் பட்டியலில் நிச்சயம் இடம் பிடிக்கும்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் ஸ்ரீராம், அவரது மனைவியாக நடித்திருக்கும் ஷீலா ராஜ்குமார் மற்றும் குட்டி பையன் தருண் ஆகியோர் நடிக்காமல், நிஜ நடுத்தர குடும்பமாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்த அவர்கள் குடியிருக்கும் வீடும் நடித்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு படம் பார்ப்பவர்களை அந்த வீட்டுக்குள் இருப்பது போன்ற உணர்வை படம் ஏற்படுத்தி விடுகிறது.

படத்தை இயக்கியிருக்கும் செழியன் தான் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். படம் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை, விருது படங்களுக்கே உரித்தான பாணியில் காட்சிகள் நகர்ந்தாலும், ரசிகர்களை சலிப்படைய செய்யாமல் நகர்வதற்கு செழியனின் ஒளிப்பதிவு முக்கிய காரணம். ஆபரேட்டிங் கேமரா மேனாக பணியாற்றியிருக்கும் எஸ்.பி.மணியையும் பாராட்டலாம்.

சவுண்ட் ரெக்கார்டிங்கும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. லைவ் ரெக்கார்டிங் செய்திருக்கிறார்கள். அது சொன்னால் தான் தெரியும், அந்த அளவுக்கு மிக மிக நேர்த்தியான பணி.

காலம் காலமாக சொந்த வீட்டில் இருந்துக் கொண்டு கராராக பல கண்டிஷன்களோடு வாடகைக்கு வீடு கொடுக்கும் ஹவுஸ் ஓனர்ஸ், இப்படத்தை பார்த்தால், வாடகைக்கு குடியிருப்பவர்களின் கஷ்ட்டங்கள் என்ன என்பதை நிச்சயம் உணர்வார்கள்.

இயக்குநர் செழியன், வாடகை வீடு தேடி அலையும் நடுத்தர குடும்பத்தின் வலிகளையும், வேதனைகளையும் சொல்வதோடு, சினிமாத் துறையில் இருப்பவர்கள் இத்தகைய பிரச்சினையால் எப்படி பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் நாசுக்காக சொல்லியிருக்கிறார். அதே சமயம், சினிமா சம்மந்தமான ஒருவரது வாழ்க்கையாக இப்படம் மாறிவிடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருந்து காட்சிகளை வடிவமைத்த விதத்திற்காகவும், திரைக்கதையை நகர்த்திய விதத்திற்காகவும் அவருக்கு இன்னும் பல விருதுகள் கொடுத்தாலும் தகும்.

உலக சினிமா என்றாலே, ஒரு சிலருக்கான படம் என்று இப்படத்தை தவிர்த்துவிட முடியாது. கண்ணாடியில் நம்மை பார்ப்பது போல, நமது வாழ்க்கையை திரையில் பார்க்கும் ஒரு அனுபவத்தை கொடுக்கும் இந்த ‘டுலெட்’ நிச்சயம் அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டிய படமே.

-ஜெ.சுகுமார்