டெண்டர் முறைகேடு தொடர்பாக வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது – நீதிமன்றம் உத்தரவு

சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம், தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது? எனக்கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த வேலுமணி தரப்பு வக்கீல், மனுவில் கூறப்பட்ட புகார்களில் உள்ள முகாந்திரம் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் கண்காணிப்பில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டது. அதில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என அறிக்கை அளிக்கப்பட்டது.

இதனால், வழக்கை முடித்து வைப்பது என முடிவு செய்த பின்னர், தற்போது வழக்குப்பதிந்தது தவறு. சுப்ரீம் கோர்ட்டு அனுமதியுடன் இந்த மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு ஏற்கனவே எடுத்த முடிவை மாற்ற முடியாது. உள்நோக்கத்துடன் வழக்குப் பதியப்பட்டுள்ளதால் வழக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வழக்குப்பதிவு செய்யும்படி ஐகோர்ட்டு உத்தரவிடவில்லை. வழக்கை ரத்து செய்யக் கோர உரிமை உள்ளது என்ற போதும், ரிட் மனுவாக தாக்கல் செய்ய முடியாது. எனவே, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணி மனுவுக்கு பதில் அளிக்க, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு உத்தரவிடுகிறோம்.” என்று கூறி, விசாரணையை ஜூலை 25-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools