டெல்டா மக்களுக்காக குரல் கொடுத்த அமிதாப் பச்சனுக்கு நன்றி தெரிவித்த கமல்

தமிழ்நாட்டில் நாகை- வேதாரண்யம் இடையே கடந்த மாதம் 15-ந்தேதி கஜா புயல் கரையைக் கடந்தது.

இந்தப் புயல் தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதத்தை கண்டன. மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.

நடிகர் அமிதாப்பச்சன் கஜா புயல் சேதங்கள் குறித்து பேசிய வீடியோவை கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

‘இந்தாண்டு நவம்பர் 15-ந்தேதி கஜா புயல் தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சூறையாடியது. அந்த பகுதிகளில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான மக்கள் தங்களின் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 3.4 லட்சம் வீடுகள் கஜா புயலால் சூறையாடப்பட்டுள்ளன.

இந்தப்பகுதிகளில் இருந்த தென்னைமரங்கள் 60 சதவிகிதம் புயலால் சாய்ந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றன. ஒரு தேசம் ஒரு மக்கள் என்பதை நிரூபிப்பதற்கு இதுதான் சரியான தருணம். சகோதரர்களே முன்னால் வாருங்கள்; வந்து உதவி புரியுங்கள். நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களைக் களத்தில் சந்தித்து வருகிறார். உங்களுடைய உதவியும் இந்த நேரத்தில் தேவைப்படுகிறது. தமிழகத்துக்கு கரம் கொடுங்கள்.

இவ்வாறு அமிதாப் பச்சன் கூறி இருக்கிறார்.

இதற்கு பதில் அளித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ‘நன்றி அமித் ஜி. கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகளைத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நம் நாட்டில் பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் உங்களைப் போன்ற மக்கள் அதை இணைக்கும் நூலாக இருக்கின்றனர்’ என பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools