டெல்டா வைரஸ் எளிதாக பரவும் – அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இந்தியாவில் பி.1.617.2 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு டெல்டா வைரஸ் என உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டி உள்ளது. இந்த வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையில் அதிக கைவரிசை காட்டியது.

டெல்டா வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. எதிர்காலத்தில் இது இன்னும் தீவிரமாக தாக்கும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சி.டி.சி. என்னும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கை ஊடகங்களில் கசிந்துள்ளன. அதில் பல முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு:-

* டெல்டா வைரஸ் பெரியம்மை போல எளிதாக பரவும், கடுமையாக பாதிக்கும். மேலும், தடுப்பூசி போடாதவர்கள் என்ன வேகத்தில் பரப்புவார்களோ, அதே வேகத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களும் டெல்டா வைரசை பரப்புவார்கள்.

இது மெர்ஸ், சார்ஸ், எபோலா, ஜலதோஷம், பருவ காய்ச்சல், சிற்றம்மை போல வேகமாக பரவுகிற வைரஸ் ஆகும். இது பெரியம்மை போல தொற்றும்.

* அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள். தடுப்பூசிகள் நோய்த்தொற்றின் 90 சதவீத தீவிரத்தை தடுக்கிறது. ஆனால் தொற்றை தடுப்பதிலும், பரப்புவதிலும் குறைவான செயல்திறனைத்தான் கொண்டுள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

இதுபற்றி சி.டி.சி.யின். இயக்குனர் டாக்டர் ரோச்செல்லி வாலன்ஸ்கை கூறுகையில், “2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், தொற்று பாதிப்புக்குள்ளாகிறபோது, தடுப்பூசி போடாமல் தொற்று பாதிப்புக்குள்ளாகிறவர்கள் போலவே மூக்கிலும், தொண்டையிலும் அதிகளவிலான வைரசை சுமந்து செல்வார்கள்” என தெரிவித்தார்.

டாக்டர் ரோச்செல்லி வாலன்ஸ்கை சி.என்.என்.டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில், “சிற்றம்மை, பெரியம்மை போல மிகவும் பரவுகிற வைரஸ் டெல்டா வைரஸ். பள்ளிக்கூடங்களில், மாணவர்கள், ஊழியர்கள், வருகிறவர்கள் என அனைவரும் கண்டிப்பாக முககவசத்தை எல்லா நேரமும் அணிந்திருக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools