தண்ணீர் தொட்டி குழாயில் தலித் பெண் தண்ணீர் குடித்ததால் தொட்டியை சுத்தம் செய்த உயர் சாதியினர்!

கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் கடந்த 18 ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த தலித் பெண் ஒருவர், உயர் சாதியினர் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள குழாயை பயன்படுத்தி தண்ணீர் குடித்தார். இதை கண்ட அங்கிருந்த சிலர் அந்த தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி விட்டு மாட்டு மூத்திரத்தால் சுத்திகரித்ததாக கூறப்படுகிறது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உள்ளூர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தண்ணீர் தொட்டி மாட்டு மூத்திரத்தால் சுத்தம் செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அந்த பகுதி வட்டாட்சியர் பஸ்வராஜ் கூறியுள்ளார்.

தண்ணீர் தொட்டியில் அந்த பெண் தண்ணீர் குடிப்பதை யாரும் பார்க்கவில்லை, இதுவரை அவர் யார் என்பது தெரியவில்லை, நாங்கள் அவளை அடையாளம் காண முயற்சிக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பெண் கண்டு பிடிக்கப்பட்டவுடன் தீண்டாமை குறித்த வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே அந்த கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளில் அனைவரும் தண்ணீர் குடிக்கலாம் என்று கிராம ஊழியர்கள் எழுதி வைத்தனர். மேலும் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிராம மக்களை அங்குள்ள அனைத்து தொட்டிகளுக்கும் அழைத்துச் சென்ற உள்ளூர் அதிகாரிகள் சிலர் தண்ணீர் குடிக்க வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools