தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.

பகலில் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெப்பம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.

இதற்கிடையில் அசானி புயல் தென் மத்திய வங்க கடலில் உருவாகி ஒடிசா, ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வலுவிழந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழையும், 5 மாவட்டங்களில் கன மழையும் பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நள்ளிரவு முதல் மழைத் தூறல் போட ஆரம்பித்தது. அதிகாலையில் ஒரு சில இடங்களில் கன மழையும், பல பகுதிகளில் லேசாகவும் பெய்தது. விட்டு விட்டு தூறலாக பெய்த மழை காலை 6 மணி முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீரென கன மழையாக பெய்தது.

எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், மாதவரம், வியாசர்பாடி, கோயம்பேடு, வடபழனி, மயிலாப்பூர், அடையாறு, அண்ணாநகர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

மேலும் புழல், மதுரவாயல், குன்றத்தூர், மடிப்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், செங்குன்றம் உள்ளிட்ட புறநகர் பகுதியிலும் லேசாக மழை பெய்தது. செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதியிலும் மழை தூறியது.

கோடை வெயிலின் வெப்பம் சென்னை வாசிகளை வீடுகளில் முடக்கி வைத்திருந்த நிலையில் திடீர் மழை குளிர வைத்துள்ளது. குளிர்ந்த காற்றும், மழை தூறலும் இருந்ததால் வெப்பம் தணிந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 2 மாதமாக வெயிலின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு கோடை மழை சற்று ஆறுதலாக இருந்தது. பகல் நேரத்தில் வீசிய அனல் காற்றில் இருந்தும் வெப்ப அலையில் இருந்தும் மக்கள் விடுபட்டனர். தொடர்ந்துமழை தூறிக் கொண்டே இருந்ததோடு வானம் இருண்டும் காணப்பட்டது. அவ்வப்போது மழை லேசாக தூறிக் கொண்டும், மேகங்கள் சூழ்ந்து இதமான சூழல் இருந்தன.

இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து இன்று தப்பினார்கள்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அலுவலகங்கள், தொழில் நிறுவங்களுக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர்.

ஜில்லென குளிர்ந்த காற்றை சென்னை மக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு சுவாசித்தனர். சிறுவர்கள், மழை தூறலில் நனைந்தபடி ஆட்டம் போட்டனர்.

சென்னை மக்களுக்கு இந்த மழை இதமான சூழலை உருவாக்கி தந்ததால் பெரும்பாலானவர்கள் மழையில் நனைந்தவாறு தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools