தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா மீது நடவடிக்கை எடுக்க பிரதமரிடம் வலியுறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ந்தேதி சென்னை வந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற “சர்வதேச செஸ்” ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருக்கு சிறப்பு சேர்த்தார். இருவரும் விழா மேடையில் சகஜமாக பேசிக் கொண்டனர்.

கருத்து வேறுபாடுகளை மறந்து இருவரும் பேசிக் கொண்டிருந்ததை அரசியல் நோக்கர்கள் வியந்து பாராட்டினர். இந்த நிலையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் இணை பிரியாது இருந்து வரும் பண்புகள்.

தொடர்ச்சியான உங்கள் ஆதரவும், இதுபோல இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளையும் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமல்ல கிண்டி கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் அளித்த சுதந்திர தின விழா தேநீர் விருந்து நிகழ்ச்சியிலும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று அவருடன் இணக்கமான நட்பை வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளையும் பங்கேற்க செய்தார். இந்த நிகழ்வுகள் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இருந்த கசப்புணர்வுகள் நீங்கி நட்பை வலுப்படுத்துவதற்கான அடித்தளம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து சொல்வதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்றார்.

இன்று காலையில் இருவரையும் தனித்தனியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிறகு மாலையில் பிரதமர் மோடியையும் சந்தித்து பேச முடிவு செய்துள்ளார். அவருக்கு பிரதமரின் இல்லத்தில் மாலை 4.30 மணிக்கு சந்தித்து பேச நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலையில் பிரதமர் மோடியை சந்திக்கும் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் சர்வதேச செஸ் போட்டியை நடத்துவதற்கு அனுமதி தந்ததற்கு நன்றி தெரிவிக்கிறார்.

அதன் பிறகு தமிழ்நாட்டு நலன் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதிதரவும், கூடுதல் நிதி ஒதுக்கி தருமாறும் விரிவான மனு ஒன்றை அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.9,602 கோடி ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை விரைந்து தருமாறும் அப்போது வலியுறுத்துவார்.

அதுமட்டுமின்றி தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதால் மசோதா மீது விரைந்து முடிவெடுத்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொள்வார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் பிரதமர் மோடியுடனான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பு முடிந்ததும் இன்றிரவு 8 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வந்து சேருகிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools