தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு!

கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஜூன் 14-ந்தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனாலும் பார்கள் திறக்கப்படவில்லை. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் 1-ந்தேதி (இன்று) முதல் பார்கள் திறக்கலாம் என்ற உத்தரவை டாஸ்மாக் நிர்வாகம் நேற்று பிறப்பித்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.

இதனைத்தொடர்ந்து பல மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடை பார்கள் இன்று திறக்கப்பட உள்ளன. இதையொட்டி நேற்று பார்களில் பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள் முழுவீச்சில் கையாளப்பட்டன. வழிகாட்டு நெறிமுறைகளின் படி தெர்மல் ஸ்கேனர், கிருமிநாசினி உள்ளிட்டவை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை பல பார்களில் பராமரிப்பு பணி இன்னும் முழுவீச்சில் நடைபெறாத நிலையும் தொடருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மதுக்கூட கட்டிட உரிமையாளர்கள்-ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க தலைவர் எம்.அன்புசெல்வன் கூறியதாவது:-

பார்கள் மீண்டும் திறக்கப்படுவது மகிழ்ச்சி தான். அதற்காகத்தான் நாங்களும் போராடி வருகிறோம். ஆனால் திடீரென்று பார் திறக்கப்படும் என்ற அறிவிப்பு எதிர்பார்க்கவில்லை. இதனால் முழுமையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. ஊழியர்கள் விடுமுறைக்கு சென்றிருப்பதால், பண்டிகை முடிந்துதான் அவர்களது வருகையை எதிர்பார்க்க முடியும். எனவே பார் திறப்பு குறித்த தேதியை குறைந்தபட்சம் 10 நாட்கள் தள்ளிவைக்க வேண்டும். இதுதொடர்பாக நாளை (இன்று) டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரை சந்திக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools