தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு – பள்ளிகளை ஷிப்ட் முறையில் நடத்த ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தொடக்கத்தில் 200-க்கு குறைவாக இருந்த தொற்று படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவல் வேகமாக உள்ளது.

சென்னையில் 1,066 பேருக்கு நேற்று புதிதாக தொற்று பரவியுள்ளது. தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து பரிசோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை எச்சரித்து உள்ளது.

இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முகக் கவசம் கட்டாய மாக்கப்பட்டுள்ளது. அதிக மாணவர்கள் கொண்ட தனியார் பள்ளிகளில் வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் நெருக்கமாக அமர வேண்டிய நிலை உள்ளது.

அதனால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடும் என்பதால் ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது காலை-மாலை என 2 ஷிப்டாக வகுப்புகளை நடத்தலாமா? என தனியார் பள்ளிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. வாரத்தில் தற்போது 5 நாட்கள் வகுப்புகள் நடை பெறுகிறது. கூட்டத்தை குறைக்கும் வகையில் வகுப்புகளை 2 ஆக பிரித்து மாணவர்களை வரவழைக்கலாமா? என ஆலோசிக்கின்றனர்.

ஒவ்வொரு வகுப்பில் உள்ள மாணவர்களை 2 ஆக பிரித்து ஒருநாள் விட்டு ஒருநாள் (3 நாட்கள்) வகுப்புகளை நடத்தலாமா? என பெற்றோரிடம் கருத்து கேட்கப்படுகிறது. 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளை தவிர மற்ற வகுப்பு மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஒருசில தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் கருத்துக்களை கேட்டு உடனடியாக நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. தொற்று பாதிப்பு குறையும் பட்சத்தில் வழக்கமாக வகுப்புகளை தொடர்ந்து நடத்தலாமா என ஆலோசித்து வருகின்றனர்.

இதுகுறித்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் குலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.நந்தகுமார் கூறியதாவது:-

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஒருநாள் விட்டு ஒருநாளாகவோ, காலை மற்றும் மாலை ஷிப்டு முறையிலோ வகுப்பு நடத்தலாமா? என பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. இப்போதுதான் பாடம் நடத்த தொடங்கியுள்ளனர். ஆனால் தொற்று அதிகரித்து மாணவர்கள் பாதிக்கப்பட்டால் பள்ளி முழுமையாக மூட வேண்டிய நிலை வரும். முன் எச்சரிக்கையாக தொற்று குறையும் வரை மாணவர்களை பாதியாக குறைத்து வகுப்புகளுக்கு வரவழைப்பது பாதுகாப்பாக இருக்கும் என்பதால் பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யலாம் என கூறப்பட்டு உள்ளது. அரசின் உத்தரவை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools