தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – உற்சாகத்தோடு பள்ளிக்கு வந்த மாணவர்கள்

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், கடந்த 19 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் ஏற்கனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொடரந்து, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளுக்கு  நவம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

அதன்படி கொரோனா நெறிமுறைகளுடன் இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு வரும் மாணவ -மாணவிகளை ஆசியர்கள் பூக்கள் கொடுத்தும், சாக்லெட் வழங்கியும் வரவேற்றனர். மாணவர்கள்- மாணவிகளும் உற்சாகத்துடன் வகுப்பறைக்குள் சென்றனர்.

பள்ளிகளின் வாசலிலேயே காய்ச்சல் சோதனை செய்யப்பட்டு, கைகள் சுத்தம் செய்த பிறகு, முகக்கவசம், கையுறைகள் வழங்கப்பட்டு பின் மாணவர்களை வகுப்புகளுக்குள் அனுமதித்தனர். வகுப்பறைக்குள் சமூக இடைவெளியைப் பின்பற்றி மாணவர்களை அமர வைத்துள்ளனர்.

சில பள்ளிகளில், மாணவர்களுக்கு கொரோனா தொற்று குறித்தும், கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும் பள்ளிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன. பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு வருவார்கள் என்பதால் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், நீண்ட நாட்களு்கு பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதால் பாடங்கள் நடத்துவதற்கு பதில், முதல் 15 நாட்களுக்கு ஓவியம், கதை, பாடல், விளையாட்டு உள்பட மனமகிழ்ச்சி செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது முறையாக செயல்படுத்திய பிறகு பாடம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools