X

தமிழகத்தில் மூன்று நாட்களை மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை தூறல் விழுகிறது. சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இன்று காலையிலும் சென்னையில் மழை தூறல் இருந்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த மழை 3 நாட்களுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

வளி மண்டலத்தில் கீழ் அடுக்கில் 1 கி.மீ. உயரத்தில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள் மாவட்டங்கள் வழியாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யும்.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கன மழை பெய்யும்.

திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை மிதமான மழை விட்டுவிட்டு பெய்யும். நேற்றிரவு சென்னையில் 1 செ.மீ. அளவுக்குத்தான் மழை பெய்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதால் அங்கு மிக கனமழை பெய்ய உள்ளது. அதன் தாக்கம் தென் மாவட்டங்களில் இருக்கும். இதன் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: south news