தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு! – அமைச்சர் தகவல்

ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் வந்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் தினமும் சராசரியாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது.

இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்துகிறது. கொரோனாவை விட வேகமாக பரவும் இந்த வைரசை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

வட மாநிலங்கள் சிலவற்றிலும், அண்டை மாநிலமான கேரளாவிலும் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை ஒரே ஒரு நபருக்குத்தான் தொற்று இருந்தது. இப்போது மேலும் 33 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனாவை எதிர்த்து போராடியதுபோல் ஒமைக்ரானையும் எதிர்த்து போராடியே தீரவேண்டும். இந்த நேரத்தில் மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு கவசம் தடுப்பூசிதான்.

எல்லோரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் ஒமைக்ரான் தொற்றை தவிர்க்கலாம். அதேபோல் கட்டாயம் முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துதல், கூட்டங்களை தவிர்த்தல் போன்ற கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடித்தால் போதும். மீண்டும் ஊரடங்கு வராது. மக்கள் கட்டுப்பாட்டால் ஒமைக்ரானையும் கட்டுப்படுத்தி விடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools